search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சார் விஜயபாஸ்கர்"

    குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #GutkhaScam #CBIRaid

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு கால் நூற்றாண்டு வரை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அவர்களை மன்னித்து விட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக காலதாமதமின்றி அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு கிடைக்காமல் சம்பா சாகுபடி பயிர்கள் கருகி வருவது வேதனை அளிக்கிறது. தண்ணீர் இருந்தும் பயிர்கள் வாடி வருகிறது. திருச்சி முக்கொம்பில் உடைந்த மதகுகளை 3 நாட்களில் சீரமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாட்கள் கடந்தும் பணிகள் முழுமை அடையவில்லை.

     


    ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை தடையின்றி கிடைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் குட்கா பிடிப்பட்டது. இத்தகைய விற்பனை என்பது உயர் அதிகாரிகள், அதிகாரம் கொண்டவர்கள் துணையுடன் தான் நடைபெறும்.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இதனால் அவர்கள் தாமாகவே ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் ராஜினாமா செய்யாமல் இருப்பது வியப்பாக உள்ளது. எனவே அவர்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #CBIRaid

    ×